Wednesday, November 16, 2005

பாட்டி வடை சுட்ட கதை

அடையார் சாலையில் பச்சை விளக்கிற்காக தற்காலிகமாக தரை இறங்கி இருந்த வாகன ஓட்டிகளிடம், இயலாதோர் கூட இயந்திரமாக யாசகம் கேட்டு கொண்டிருந்தனர்.
(ஹீஹீ..இந்த location வெறும் buildup'தான். கதை கீழே இருக்குதுங்கோ!)


காட்சி ஒன்று, பதிப்பு 1.0; சித்திரை 3, பார்தீப வருடம், பகல் 11:56.53.876, குறில் ரேகை 13° 05. 271' N ; நெடில் ரேகை 80° 18.125' E
பெயர்: மங்கம்மாள்.

ஏம்மா..வந்ததே லேட்டு... இதுல வேற எண்ணை சட்டிக்குள்ள என்னத்த தேடிக்கிட்டு இருக்க? வெறும் சட்டினியொட காஞ்ச தட்ட வச்சிக்கிட்டு கஸ்டமர் எவ்ளோ நேரம் நிப்பாரு? உன்ன நம்புனா நாளைக்கு நான் கூட பக்கத்து கடைல தான் திங்கனும் போல... வெரஸா ஆகட்டும்...

எனக்கென்ன எளுவதெட்டு கையா இருக்கு? நாளு முளுக்க ரோட்டோரமா கெடந்து எண்ணையில வேகுராப்புல இருக்கு, இதுல நிமிசதுக்கு நாப்பத கொண்டா அறுவத கொண்டான்னா எங்க போவேன்? "இதோ ஆச்சுங்க.." என்றபடி சல்லி கரன்டியில் அள்ளுகையில்..

"ஏய்ய்ய்ய்ய்...."

காட்சி ஒன்று, பதிப்பு 1.1; சித்திரை 3, பார்தீப வருடம், பகல் 11:56.53.876, குறில் ரேகை 13° 05. 271' N ; நெடில் ரேகை 80° 18.121' E

பெயர்: கிடையாது

சே! என்ன ஊருடா இது...
ஒரே இரைசலும் புகையுமா எப்படித்தான் பொறுத்துக்கிறாங்களோ. வெய்யில் வேற (இது கொஞ்ச நாள் முன்னாடி நடந்தது) கொளுத்துது, காலையில சாப்பிட்ட இட்லி கூட திம்முனு இருக்கு. இனி ஒரு அடி கூட நகர நம்மால முடியாதுடா சாமி...


"சரி.. ரோட்டுக்கு அந்த பக்கம் இருக்கும் டீ கடை தள்ளி இருக்குற மரம் பக்கம் போவோம். இப்டி தத்தி தத்தி ஓடிடலாமா? இல்ல சிவப்பு மாறுன பின்னாடி போவோமா? இப்ப போனா எவனாவது அடிப்பானா? சே சே... படிச்சவனுங்க.. ஒன்னும் பன்ன மாட்டனுவ", என்று சொல்லி கொண்டே கடந்து முடிக்கையில்..

"டேய்ய்ய்ய்..."

காட்சி ஒன்று, பதிப்பு 1.3; சித்திரை 3, பார்தீப வருடம், பகல் 11:56.53.876, குறில் ரேகை 13° 05. 269' N ; நெடில் ரேகை 80° 18.125' E

பெயர்: ஜிம்மி, இப்படி கூப்பிட்டா திரும்பிப்பாக்கனும் இல்லன்னா அடிவுளும்.

"*#$%@&* டொம்ம்... தொப்ப்!"....."யார்ரா அவன்! கண்ணு மண்ணு தெரியாம ப்ளாட்பாரம் மேலே போனவன்?"...சத்தம் கேட்டு சடாரென்று திரும்பியதில் கழுத்து பிடித்துக்கொன்டது...ஐயோ! எனக்கு வேணும், எவன் எப்படி போனா நமக்கு என்ன? கஷ்ட காலம்.

அட.. அங்க என்னா விழுந்திச்சி? திங்கிற பொருளு மாதிரி இருக்கே, மணமா வேற இருக்கும் போலிருக்கு, எடுப்பமா?

ஹீ ஹீ... இன்னிக்கி தங்கச்சி மொகத்துல முளிக்கும்போதே நெனச்சேன்..நம்மள மாதிரியா? ராசிக்காரில்ல..

"லவுக்.." வாயில் ஒரு துண்டு வைக்கயில்..மொடேரென்று பின்னந்தலையில் அடி விழுந்தது.

"சனியன்! கண்டத தின்னு போட்டு கவுந்தடிச்சிபுட்டு நம்ம தாலிய அறுக்குதுங்க!!" என்றபடி வேலியில் மாட்டி இருந்த போர்டை தூக்கி நிறுத்தினார் கிண்டி சிறுவர் பூங்கா காவலர்.

"கண்டிப்பாக விலங்குகளுக்கு வெளி உணவு தரக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்!!" போர்டில் வாசகம் மின்னியது. அது புரியாமல் தண்டிக்கப்பட்ட நரி மலங்க மலங்க விழித்தது.


இங்கனதான் எங்கியோ நடந்தது

பின் குறிப்பு: தண்ணி லாரி தாறுமாறாக ஓடியதில் மிரண்ட காக்கா, வடை அள்ளி கொண்டிருந்த மங்கம்மா பாட்டியின் கரண்டியை தட்டி விட்டதில் வடை அருகில் இருந்த சிறுவர் பூங்காவில் அடைக்கப்பட்ட நரியிடத்தே விழுந்தது. இச்சம்பவம் Shankar, Boys படத்தில் பயன்படுத்திய அதே Camera'விலே சுடப்பட்டது.

0 Comments:

Post a Comment

<< Home